Thursday, October 21, 2010

I like this Politician

அரசியல் சாக்கடைப் பன்றிகளுக்கு இடையில் ஒரு மனிதர். இக்கட்டுரையினை வெளியிட்ட ஜூவிக்கு ஒரு நன்றி. ஊழல், கொலை, கொள்ளை, திருட்டு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றில் ஊறித்திளைக்கும் அரசியல்வாதிகளில் இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் சற்றே மனதிற்கு சந்தோஷம் தரும் செய்தி அல்லவா. இதோ அந்தச் செய்தி.



சைக்கிள் செயின் நீளத்தில் தொங்கும் தங்கச் சங்கிலி, பளபளா நிறத்தில் முரட்டுபிரேஸ்லெட், கார், பங்களா… ‘மக்கள் பணி’ ஆற்றிவரும் இன்றைய கவுன்சிலர்களே இப்படிப்பட்ட அடையாளங் களோடுதான் வலம் வருகிறார்கள். ஆனால், மருத்துவராகவும், நாடாளுமன்ற உறுப்பி னராகவும் இருக்கும் ஒருவர் ஒழுகும் குடிசை வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா!



சென்னையை ஒட்டிய திருவள்ளூர் நாடாளு மன்றத் தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க. எம்.பி-யான டாக்டர் வேணுகோபால்தான் அந்த எளிமையான மனிதர். பெரம்பூர் லோகோ ஜி.கே.எம். காலனியில் இருக்கிறது எம்.பி-யின் குடிசைக் குடியிருப்பு. வீட்டின் முன்புறத்தில் இருக்கும் வெட்டவெளியிலேயே தகரக் கொட்டகை அமைத்து தினமும் பொது மக்களை சந்திக்கிறார். நாம் சென்றிருந்த நேரம், நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் வீடு இழந்த நெமிலிச்சேரி மக்கள் தங்கள் குறைகளை எம்.பி-யிடம் சொல்லி கதறிக் கொண்டிருந்தனர்.



”எம்.பி-யாகிறதுக்கு முன்னாலேயே முழுநேர டாக்டரா இந்தத் தொகுதி முழுக்க அறிமுகமானவர்தான் வேணுகோபால். கொடுங்கையூரில் இருக்கிறது அவரோட கிளினிக். அதிகபட்ச ஃபீஸே 25-தான்… ஏழைப்பட்ட சனங்களுக்கு எந்தக் கட்டணமும் இல்லாமல் தன்னோட செலவிலேயே மருந்து மாத்திரையையும் வாங்கிக் கொடுப்பார். இப்பவும் இங்கே வந்திருக்கிற மக்கள்ல பாதிப்பேர் தங்களோட சொந்தப் பிரச்னைகளைச் சொல்ல வந்திருக்காங்கன்னா, மீதிப்பேர் தங்களோட வியாதிகளுக்காகத்தான் வந்திருக்காங்க…” என்று எம்.பி-யின் இன்னொரு முகத்தைக் காட்டி புளகாங்கிதம் அடைகிறார்கள் ஏரியாவாசிகள்.



மகளின் இதய ஆபரேஷன் செலவுக்கு வழி கேட்டு வந்தவருக்கு பிரதமர் நிவாரண உதவித் தொகையின் கீழ் நிதி வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா கேட்டு முறையிட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவர்களுடன் ஆலோசனை…. என்று அடுத்தடுத்துபடுபிஸியாக இருந்தார் எம்.பி.! அவரது குடிசை வீட்டிலோ வந்திருப்பவர்களுக்கு சுடச்சுட காபி தயாராகிக்கொண்டு இருந்தது.



”நந்தனம் கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போதே அ.தி.மு.க-வின் மாணவர் அணித் தொண்டராகக் கட்சி வாழ்க்கையை ஆரம்பித்தவர். மிகுந்த பொருளாதாரச் சிக்கலுக்கிடையே பகுதி நேர வேலைகள் பார்த்துக் கொண்டே எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார். வீட்டுக்குத் தலைப்பிள்ளை என்பதால் பொறுப்பு அதிகம். உடன் பிறந்த மூன்று தம்பிகள், மூன்று தங்கைகளையும் படிக்க வைத்துக் கல்யாணமும் செய்துவைத்தார்.



வேலை காரணமாக இரண்டு தம்பிகளும் வேறு ஏரியாவில் குடும்பத்தோடு செட்டிலாகிவிட… இப்போது எம்.பி. குடும்பமும் அவரது தம்பி குடும்ப மும் இந்த ஓட்டு வீடு, குடிசை வீடு இரண்டிலும் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். 2004-லேயே புது வீடு கட்டுவதற்காக கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தார் டாக்டர். ஆனால், அப்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் திடீரென்று கட்சி இவருக்கு ஸீட் ஒதுக்கவே பணத்தை எல்லாம் செலவழித்து தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன் பின்பு பழையபடி கட்சிப் பணி, மருத்துவத் தொழில் என்று இருந்தவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக 2008 தேர்தலில் அம்மா ஸீட் ஒதுக்கினார்கள். தொகுதி முழுக்க இலவச மருத்துவ முகாம் நடத்துவது, கட்சிக்காகக் கடுமையாக உழைப்பது என்று எளிமையும் நேர்மையுமாக சுற்றிச் சுழன்ற டாக்டரை மக்களும் எம்.பி-யாக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள்!” என்று ஒரு டாக்டர், எம்.பி.யான கதையை உணர்ச்சிபூர்வமாக விளக்கினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.



”எங்கே போறதா இருந்தாலும் ரயில்லதான் போவார். டெல்லிக்கு மட்டும்தான் ஃப்ளைட்டுல போவார். ரயில் வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்க வசதியாக இப்போதுதான் பேங்க் கடனில் ஒரு கார் வாங்கி இருக்கிறார். எவ்வளவோ பேருக்கு வீடு, மனை, பட்டா… வாங்க உதவிகள் செய்கிறார். ஆனாலும் தனக்குன்னு ஒரு வீடு கட்ட இதுவரையிலும் யோசிக்கவே இல்லை. கேட்டா…. ‘பேங்க்ல லோன் கேட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சுடும்’னு சொல்றார்!” என்கிறார்கள் அக்கம்பக்கக் குடும்பத்தினர்.



வேணுகோபாலின் வீட்டை வலம் வந்தோம். சின்னஞ்சிறிய அந்தக் குடிசை வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று சமையலறை, அருகிலேயே தங்கி ஓய்வெடுக்க வசதியாக ஒரு கட்டில்… எதிரில் அமைந்திருக்கும் சிறிய ஓட்டு வீட்டின் ஒரு பகுதியில் எம்.பி-யின் தாயாருக்கு ஒரு கட்டில். மொத்தக் குடும்பத் தினரும் பயன்படுத்த ஒரேயரு பழைய பீரோ.



பொதுமக்கள் சந்திப்பை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்த வேணுகோபால்,



”என்ன சார் என் வீட்டை இவ்வளவு ஆச்சர்யமா பார்த்துட்டு இருக்கீங்க…?” என்றபடியே நம்மிடம் பேசத் தொடங்கினார்.



”ஒரு மருத்துவரா நோயாளிகளை மட்டுமே திருப்திப்படுத்திக்கிட்டு இருந்த என்னை, எம்.பி-யாக்கி லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்புத் தந்தாங்க அம்மா. இதுவே எனக்குப் போதும். மற்றபடி இந்த வீட்டுக்கு என்ன குறைச்சல்? இந்த வீட்டுலயிருந்துதானே நான் டாக்டருக்குப் படிச்சு இன்றைக்கு எம்.பி-யாகவும் ஆகியிருக்கேன்! என்ன… இந்த மழையில ஓட்டு வீடு மட்டும் அங்கங்கே கொஞ்சம் ஒழுகிச்சு. கெயிட்டி தியேட்டர் பக்கத்துல 300 கொடுத்து பழைய விளம்பர ஃப்ளெக்ஸ் ஒண்ணை வாங்கிட்டு வந்து ஓட்டு மேல போர்த்திவிட்டேன். இப்ப பிரச்னை எதுவும் இல்லை!” என அவர் பேசிக்கொண்டே போக… நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா எனக் கிறுகிறுத்துப் போனோம்.



”எப்படி சார்… இவ்வளவு எளிமையா வாழுறீங்க..?” என அடக்கமுடியாத ஆச்சர்யத்தோடு நாம் கேட்க… ”இருக்க இடம் இல்லாம எத்தனையோ பேருங்க ரோட்டோரம் ஒண்டிக் கிடக்கிறாங்க… அவங்களோட ஒப்பிட்டா நான் பெரிய பணக்காரனாச்சே சார்! வசிக்கிற இடம் எப்படி இருந்தால் என்ன… வாழுற முறை நல்லா இருந்தா சரிதானே சார்…” என்றார் வெகு இயல்பாக.



இந்த வார்த்தைகளை அத்தனை அரசியல்வாதிகளுக்கும் அச்சடித்துக் கொடுக்க வேண்டும் போல் இருந்தது நமக்கு!



- த.கதிரவன்

No comments:

Post a Comment