சமீபத்தில் எனது நண்பரொருவர் எனக்களித்த புத்தகம், தமிழக முதல்வர் கலைஞரின் “மொழிப் போரில் ஒரு களம்”. புத்தகத்தின் வாசிப்பின் ஊடே ஒரு முக்கியமான விஷயத்தினை புரிந்து கொண்டேன். கீழ்க்கண்ட பாராவைப் படித்துப் பாருங்கள்.
அன்புள்ள நண்ப,
“ இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது. ஒரே அமைதி. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கிறேன். நீண்ட நேரம் மெளனமாயிருக்கிறேன். பேச்சின்றி…. விவாதமின்றி…. ஓசையின்றி…. அசைவின்றி வளரும் தாவர வாழ்க்கை ! ஓய்வு உடலுக்கு நல்லது. உள்ளத்துக்கும் நல்லது. அது நம்மைச் சிந்திக்க வைக்கிறது”
அல்மோரா சிறைச்சாலையில் தன்னந்தனியாக அடைக்கப்பட்டிருந்த பண்டித நேரு அவர்கள், தான் உணர்ந்தது பற்றி எழுதிய குறிப்புத்தான் மேலே காணப்படுவது. நேருவாக நான் இல்லாவிட்டாலும் அவருக்கேற்பட்ட சிறை அனுபவம் எனக்கும் இப்போது பாளையங்கோட்டையில் ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் அவரது அந்த வாசகம் என்னைப் பொருத்தவரையில் கவர்ந்து இழுக்கத்தக்க விதமாக அமைந்து விட்டதாக உணருகிறேன்
மேற்படி பாரா கலைஞரின் கையால் எழுதப்பட்டது. நேருவாக நான் இல்லாவிட்டாலும் என்று தொடரும் வரியைக் கவனித்தால், தலைவன் என்பவன் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்பவன் என்று புரிந்து கொள்ளலாம். பலரும் தான் சிறையில் இருக்கின்றார்கள். அவர்களின் சிந்தனையோட்டம் விடுதலையாவதைப் பற்றிச் சிந்திக்கும். ஆனால் கலைஞர் தன்னை இந்தியாவின் சிந்தனைச் சிற்பியுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார். இந்த எண்ணம் தான் கலைஞரை ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராக வர உதவியது.
கலைஞரைப் பற்றிய, அவரின் அரசியல் பற்றிய ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது பற்றி நான் இப்போது எழுதப்போவதில்லை. இச்சமயத்தில் நமக்குத் தேவையும் இல்லை. அவரின் புத்தகத்தின் வாயிலாக “ அவர் தன்னை ஒரு தலைவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் “ என்று புரிந்து கொள்ள முடிந்தது.அவரின் காலத்தில் அவருடன் அரசியலில் இணைந்தவர்கள் அனைவரும் நிரம்பப் படித்தவர்கள். ஆனால் கலைஞரோ அவ்வளவு படிக்காதவர். இருப்பினும் படித்தவர்களுக்கு சமமாய் தன்னை வளர்த்துக் கொண்டார். அவரின் கவிதையும், எழுத்தும் படித்தவர்கள் எழுதுவதை விட வசீகரிமானது. அவரின் வெற்றி அவரின் எழுத்தின் மூலம் ஆரம்பமானது.
தலைவன் என்பவன் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளுபவன் என்று நாம் பலரின் வாழ்க்கை மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் இன்றைய தலைவர்களோ ஒன்று ரவுடிகளாய் இருக்கிறார்கள். அல்லது வாரிசுகளாய் இருக்கிறார்கள். உண்மையான தலைவர்களைக் காண்பது அரிதாய் இருக்கிறது. தலைவர்கள் என்றுச் சொல்லக்கூடியவர்கள் இன்றைக்கு எந்த வித தகுதியும் இன்றி இருக்கிறார்கள்
- பஞ்சரு பலராமன்
No comments:
Post a Comment