Thursday, November 4, 2010

நினைவூட்டல்களின் காலம்


உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது

ஒருவருக்கும்
திரும்பிப் பார்க்க
ஒன்றுமில்லாத
ஒரு காலத்தில்

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது

கொடுத்ததைப்
பெற்றுக்கொண்டதை

அர்ப்பணித்துக்கொண்டதை
இழந்து வந்ததை

கண்துஞ்சாமல் இருந்ததை
கணக்குகள் பார்க்காதிருந்ததை

சிதறியதைக் கோர்த்துத் தந்ததை
உடைந்தவற்றை ஒட்டியதை


உனக்கு நினைவூட்டினால்தான்
நீ நினைத்துப் பார்ப்பாயா?

எல்லாவற்றையும் மாற்ற முடியும்
என்ற அப்போதைய நம்பிக்கைகளை

உண்மையாகவே கொஞ்சம் மாற்றியபோது
அடைந்த உவகைகளை

சாய்ந்துகொள்ளக் கிடைத்த தோள்களே
போதுமாக இருந்த நம் பயணங்களை

ஒரு பிடிமானமும் அற்று வீழ்ந்தபோது
அந்தரத்தில் தாங்கிய கைகளை


உனக்கு நினைவூட்டினால்தான்
இப்போது கொஞ்சம் கருணை காட்டுவாயா?

இதைவிடவும் பெரிய கஷ்டங்களைத்
தாங்க முடிந்ததை

இதைவிடவும் பெரிய தவறுகளை
மன்னிக்க முடிந்ததை

பெரியதாகத் தோன்றிய
நமது சிறிய காதல்களை

அப்போது சிறியதாகத் தோன்றிய
நம் பெரிய வாதைகளை


உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?

இனி திரும்பப் பெற முடியாத
ஒரு காலத்தை

இனி மீட்கமுடியாத
ஒரு பருவத்தை

இனி கண்டுபிடிக்கமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை

இனி நிரூபிக்கமுடியாத
சில நியாயங்களை

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் வருத்தமானது

நினைத்துப் பார்ப்பதன் விலையை
யாரும் செலுத்தத் தயாரில்லாத

ஒரு காலத்தில்
அல்லது
மறதி மிக மிக மலிவாகக் கிடைக்கும்
ஒரு காலத்தில்

உனக்கு இதை
நினைவூட்டுதல்
கொஞ்சம் அவமானகரமானது

-மனுஷ்ய புத்திரன்-

No comments:

Post a Comment