Monday, November 8, 2010

வியூகத்திற்குள் இருக்கும்போது....


வியூகத்திற்குள்
நீங்கள் இருக்கும்போது
நாம் ஆயுதபாணியா
நிராயுதபாணியா என்று
எப்போதும் யோசிக்கிறீர்கள்

உங்கள் ஆயுதங்களை
நீங்கள் பயன்படுத்தக்
கற்றுக் கொள்வதற்குள்
யுத்தம் முடிவுக்கு வந்துவிடலாம்

சரணடைவதா
எதிர்த்துப் போரிடுவதா
என்று ஏன் உடனடியாக
முடிவெடுக்க விரும்புகிறீர்கள்

யுத்தத்தில்
நீங்களாக எடுக்கும்
எந்த முடிவும்
உங்களது கற்பனைகள் மட்டுமே

வியூகத்திற்குள் இருக்கும்போது
எதிரியின் பலம் குறித்தும்
பலவீனம் குறித்தும்
ஏன் இவ்வளவு சிந்திக்கிறீர்கள்

எதிரியும்
தன்னைப் பற்றி
அவ்வளவு குழப்பங்களுடன்தான்
சிந்தித்துக்கொண்டிருக்கிறான்

உடைத்துத் திறக்கக்கூடிய
ஒரே ஒரு அரணைப் பற்றி
உங்கள் வரைபடத்தில்
துல்லியமாகக் குறிக்கிறீர்கள்

அதுதான் உங்களுக்கு
விரிக்கப்பட்ட
மரண வலையாகவும் இருக்கலாம்
இல்லையா?

வியூகத்திற்குள் இருக்கும்போது
நான் முதலில்
சிந்திப்பதை நிறுத்தி விடுகிறேன்

சிந்திப்பதை நிறுத்தும்போது
நாம் பயப்படுவதும்
நின்று விடுகிறது

அப்போது நான்
ஒரு பியர் பாட்டிலையோ
ஒரு புத்தகத்தையோ
திறக்கிறேன்.

அவை நமக்கு முதலில்
மறதியைக் கொண்டு வருகின்றன
பிறகு
அதன் வழியே விடுதலையை

வியூகத்தில் இருக்கும்போது
நான் புதிதாக ஒரு பெண்ணைக்
காதலிக்கத் தொடங்குகிறேன்

அது நம்மைப்
புதிதாக வேறொரு வியூகத்திற்குள்
செலுத்தி விடுகிறது

வியூகத்தில் இருக்கும்போது
தியானம் செய்வதோ
இயற்கை உணவுகளை சாப்பிடுவதோ
’ஜிம்’மிற்கு செல்வதோ
மிகவும் நல்லது

நாம் ஏதாவது ஒன்றைத்
தீவிரமாகப் பின்பற்றாவிட்டால்
வியூகத்தை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்

வியூகத்திற்குள் இருக்கும்போது
புதிதாக நீங்கள்
ஒரு செல்போனையோ
காரையோ வாங்குவது சிறந்தது

வியூகத்தின்போது
நம்மிடம் இருந்து பறிக்கப்படுபவை
எதுவென்று நமக்குத் தெரியாது

வியூகத்தில் நீங்கள்
அபிமன்யுவைப்போல
திகைத்துப் போய்விடுகிறீர்கள்

கிறிஸ்துவைப்போல
அமைதியாக ரத்தம் சிந்துங்கள்
சிலுவையில் தொங்கியபடி
எதிரியின் பாவங்களை மன்னியுங்கள்
வேறெப்படியும்
வியூகத்திலிருந்து
வெளியேற முடியாது

வியூகத்தில்
எதிர்த்துப் போரிட
நீங்கள் ஒரு சத்ரியனோ
போராளியோ அல்ல

நீங்கள் வெறுமனே
இந்தக் கவிதையைப்
படிப்பவர்
அல்லது
எழுதுபவர்தானே

-மனுஷ்ய புத்திரன்-

No comments:

Post a Comment