Friday, December 31, 2010
ஒரு உரிமை நிலைநாட்டப்படும்போது....
ஒரு உரிமை
நிலைநாட்டப்படும்
இடத்தில் நீ இருப்பது
உண்மையில்
ஒரு படுகளத்தில்
இருப்பதைப்போன்றதே
ஒரு உரிமையை
நிலைநாட்டுபவர்
முதலில் அந்த இடத்தை
துப்புரவு செய்கிறார்
ஒவ்வொன்றையும் தனது ஒழுங்கின்
வரைபடத்திற்குள் கொண்டு வருகிறார்
நீ அந்த இடத்தில்
வெவ்வேறு இடத்தில்
மாறி மாறி உட்காருகிறாய்
உன் உடலை
எவ்வளவு குறுக்க முடியுமோ
அவ்வளவு குறுக்கிக்கொள்கிறாய்
ஆனால்
ஒரு உரிமையை
நிலை நாட்டுபவருக்கு
நீ எங்கே உட்காருகிறாயோ
அந்த இடம்தான் முக்கியமானதாகிறது
அங்கிருந்துதான்
அவர் எல்லாச் சீர்திருத்தங்களையும்
தொடங்க விரும்புகிறார்
நீ உன் அணுகுமுறைகளை
மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறாய்
அன்பின் வெவ்வேறு முறைமைகளைப்
பயிற்சி செய்கிறாய்
நிலைகுலையாமல் இருப்பதுபோல
பாவனை செய்கிறாய்
அது அவருடைய இடம்தான் என
திரும்பத் திரும்ப வாக்குறுதியளிக்கிறாய்
ஆயினும் நீ
அங்கேதான் இருக்கிறாய்
ஒரு உரிமையை நிலைநாட்டுபவர்
சந்தேகத்திற்குரிய சிறிய புற்களையும்
வேரோடு பிடுங்கிவிடவே விரும்புகிறார்
அனுமதியின்றி பறக்கும்
எளிய வண்ணத்துப்பூச்சிகள்
அவரை அமைதியிழக்கச் செய்கின்றன
நீ
எதை விட்டுக்கொடுக்க வேண்டும்
எதை எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று மிகவும் குழப்பமடைகிறாய்
எதை மறைக்க வேண்டும்
எதை வெளிப்படுத்தவேண்டும்
என்ற நிச்சயமின்மைகள்
உன்னைப் பைத்தியமாக்குகின்றன
ஒரு உரிமையை நிலை நாட்டுபவர்
எல்லா இடத்திலும் தனது பெயரை
எழுத விரும்புகிறார்
எல்லா உணர்ச்சிகளிலும்
தனது முகத்தைப் பதிக்க எண்ணுகிறார்
எல்லா உரையாடல்களிலும்
அவர் குறுக்கிடுகிறார்
நீ உன் வெற்றுக்கைகளைத்
திரும்பத் திரும்ப விரித்துக் காட்டுகிறாய்
நீ அங்கே தற்செயலாகத்தான் வந்தாய்
என வீணே நிரூபிக்க முயற்சிக்கிறாய்
ஒரு உரிமையை நிலைநாட்டுபவர்
தூங்குவதை முதலில் நிறுத்திவிடுகிறார்
எந்த மறைவிடமும் இல்லாமல்
விளக்குகளைப் பிரகாசமாக எரியவிடுகிறார்
எப்போதும் எதையாவது ஒன்றைக்
கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்
உனக்கு ஆத்திரம் வருகிறது
பொறுமையிழக்கிறாய்
எது நிலைநாட்டப்படுகிறதோ
அதை ஒரு கணம் சீர்குலைக்கவிரும்புகிறாய்
எது உனக்கு திரும்பத் திரும்பச்
சொல்லப்படுகிறதோ
அதை ஒரு முறை மறுக்க விரும்புகிறாய்
ஒரு உரிமையை நிலைநாட்டுபவர்
இறுதியில் ஒருநாள் வென்றுவிடுகிறார்
எல்லாவற்றையும் அவர்
தன் விருப்பத்திற்கு அடிபணியச் செய்கிறார்
இப்போது அவர் உனக்கு
ஒரு சிறிய இடத்தை அளிக்க முன்வருகிறார்
அதை அவர் உனக்கு
அவ்வளவு பெருந்தன்மையுடன் அளிக்கிறார்
அப்போதுதான்
நீ முதன்முதலாகத் தோல்வியடைகிறாய்
நீ வெளியேற்றப்படுவதைவிட
அது கடுமையானது
நீ தண்டிக்கப்படுவதைவிட
அது அவமதிப்பால் உறையச்செய்வது
அதுதான் உன்னை
அவ்வளவு
மனமுடையச் செய்கிறது
அதுதான் உன்னை
அப்படி
அழவைக்கிறது
-மனுஷ்ய புத்திரன்-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment