அழகற்றவளென
நீண்ட காலமாக
அறியப்படுகிறாள் யமுனா
அவள் அழகற்றவளென
அறிந்துகொண்டதுதான்பிறகு அவளது எலலா நினைவுகளோடும்
அது நிழல்போல வந்துகொண்டே இருக்கிறது
எல்லா வரிசைகளிலும்
நாம் ஏன் கடைசியில் நிற்கிறோமென
அடிக்கடி யோசிக்கிறாள் யமுனா
அவளது வேலைக்கான நேர்முகங்கள்
ஒரு நிமிடத்தில் முடிவடைந்துவிடுகின்றனஅவளது அன்பிற்கான விண்ணப்பங்கள்மீது
உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டு விடுகின்றன
நிறையக் கற்றுக் கொள்கிறாள் யமுனா
இத்தோடு ஐந்து பாஷைகள் தெரியும் அவளுக்கு
அதில் ஒன்று கிளிகளின் பாஷை
இரண்டு மொழிகளில் கவிதைகள் எழுதுகிறாள்
பார்த்ததைப் பார்த்ததுபோலவே படங்களும் எழுதுவாள்
பேச்சுப்போட்டியில் அவள்தான் எப்போதும் முதல்
ஓட்டபபந்தயத்தில் ஒருபோதும்
அவள் பின் தங்கியதே இல்லை
சிறு சிறு வித்தைகள் எவ்வளவோ தெரியும்
அஞ்சல் வழியில்
இப்போது மூன்றாவது எம்.ஏ. படிக்கிறாள்
தன்னம்பிக்கை மிக்கவளாக
வாழ்கிறாள் யமுனா
தன் மார்பகங்களை உற்றுப் பார்ப்பவர்களைப்பற்றியே
அவள் எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதில்லை
இருள் வழிகளுக்கு எப்போதும் அவள் அஞ்சுவதில்லை
தனித்து நடக்கையில் ஓசைகளை
உற்றுக் கேட்பதில்லை
கண்ணாடியில் அதிக நேரம்
அவளுக்குத் தேவைப்படுவதில்லை
யமுனாவின் எந்த வழியிலும்
குறுக்கு வழிகள் எதிர்ப்படுவது இல்லை
எதுவும் அவளுக்கு
இலவசமாகத் தரப்படுவதில்லை
யாரும் அவளுக்கு
சலுகைகள் ஏதும் காட்டுவதில்லை
எந்தப் பொய்ச் சத்தியங்களும்
அவளிடம் செய்யப்படுவதில்லை
தான் முத்தமிடப்படும்போது
தன் முகம் பார்க்கப்படுவதில்லை
என்பதை அறிவாள் யமுனா
உண்மையில் முத்தமிடப்படுவது
தான்தானா என்கிற குழப்பம் அவளைப் பதட்டமடையவைக்கிறது
உள்ளத்தின் அழகைப் பற்றி சொல்லப்படும் பொய்கள்அவளைக் கசப்படையச் செய்கின்றன
அதைவிட நேர்மையானவை
தனக்குப் பொருந்தாத ஆடைகளும்
போலி அழகு சாதனப் பொருள்களும்
என்றவள் நம்புகிறாள்
அழகிய பெண்களை
மிகவும் நேசிக்கிறாள் யமுனா
இந்த உலகம் அவர்களுடையது என்பதில்
அவளுக்குப் புகார்கள் ஏதுமில்லை
அழகானவை அனைத்தும் தம் பிரகாசத்திற்கு
அழகற்றதையே பெரிதும் சார்ந்திருக்கின்றனஎன்பதில் அவளுக்கு
ஒரு ரகசியப் பெருமிதமும் உணடு
யமுனாவுக்கு எப்போதும் இருக்கும்
ஒரே வருத்தம்
ஜானகிராமன்
யமுனாவுக்கு
வேறு பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான்
-மனுஷ்ய புத்திரன்-